கில் தடுமாறுவார்... ரோஹித் என்ன செய்வார் - இந்தியாவை அச்சுறுத்தும் இந்த பாஸ்ட் பௌலர்!

Indian Cricket Team: இலங்கையின் இந்த வேகப்பந்துவீச்சாளர் ரோஹித் சர்மா, சுப்மான் கில் உட்பட இந்திய டாப் ஆர்டர் பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார். அவர் குறித்து இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Nov 1, 2023, 02:55 PM IST
  • ரோஹித் சர்மா நல்ல ஃபார்மில் உள்ளார்.
  • சுப்மான் கில் ரன் குவிக்க திணறி வருகிறார்.
  • இலங்கை அணியுடன் இந்தியா நாளை மோதல்.
கில் தடுமாறுவார்... ரோஹித் என்ன செய்வார் - இந்தியாவை அச்சுறுத்தும் இந்த பாஸ்ட் பௌலர்! title=

India National Cricket Team: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) லீக் சுற்று தற்போது கடைசி கட்டத்தில் உள்ளது. அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 6 போட்டிகளில் விளையாடிவிட்டன. பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மட்டும் 7 போட்டிகளில் விளையாடி உள்ளன. எனவே, அடுத்து வரும் போட்டிகள் நடப்பு தொடரின் அரையிறுதி வாய்ப்பை மட்டுமின்றி 2025ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கும் வழிவகுக்கும். 

அதிகரித்த சுவாரஸ்யம்

அதாவது, பாகிஸ்தான் நீங்கலாக நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகள்தான் 2025இல் பாகிஸ்தான் நாட்டில் நடக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதிபெறும். வங்கதேசம், இங்கிலாந்து அணிகள் முறையே 9ஆவது, 10ஆவது இடத்தில் இருப்பதால் யார் யார் சாம்பியன் டிராபிக்கு (ICC Champions Trophy 2025) தகுதிபெறுவார்கள் என்பதும் இப்போது நடப்பு உலகக் கோப்பை தொடரில் சுவாரஸ்யத்தை அதிகரித்திருக்கிறது எனலாம். 

அப்படியிருக்க, நடப்பு உலகக் கோப்பைக்கே தகுதிச்சுற்று மூலம் நுழைந்த இலங்கை அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. அரையிறுதி வாய்ப்பு அந்த அணிக்கு ஏறத்தாழ மறைந்துவிட்டது என்றாலும், நாளை (நவ. 2) இந்திய அணிக்கு (Team India) எதிரான போட்டி என்பது அந்த அணிக்கு மிக மிக முக்கியமானது. முன்பு கூறியது போல், அரையிறுதிக்கு தகுதிபெறுவது மட்டுமின்றி சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதிபெறுவதும் நடப்பு தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | WC 2023: ஹர்திக் வந்தால்.. இந்திய அணியில் இருந்து வெளியேறும் அந்த வீரர் யார்?

அதே வான்கடே மைதானம்...

அப்படியிருக்க, இந்திய அணி தொடர்ச்சியாக 6 போட்டிகளை வென்றிருந்தாலும் எந்த போட்டியையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் 2011இல் இலங்கையை வீழ்த்தி உலகக் கோப்பையை இந்திய அணி இரண்டாவது முறையாக கைப்பற்றியது. தற்போது அதே மைதானத்தில் 12 ஆண்டுகளுக்கு இலங்கை அணியுடன் இந்தியா (IND vs SL) மோத உள்ளது. எனவே, மீண்டும் இலங்கையை தோற்கடித்து தொடர்ச்சியாக 7ஆவது வெற்றியை பெற வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அச்சுறுத்தும் மதுஷங்கா

அந்த வகையில், மும்பை வான்கடே மைதானம் என்பது பெரும்பாலும் பேட்டிங்கிற்கு ஏதுவாக இருக்கும். செம்மண் ஆடுகளம் என்பதால் பவுண்ஸ் இருக்கும், மேலும், மணிகட்டு சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் சற்று கைக்கொடுக்கும். எனவே, இந்திய அணி பேட்டர்களுக்கு இலங்கையின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் தில்ஷன் மதுஷங்கா (Dilshan Madhushanka) மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பார், குறிப்பாக டாப்-ஆர்டர் பேட்டர்களுக்கு. 

பவர்பிளேவில் 6 விக்கெட்டுகள்

மதுஷங்கா இந்த நடப்பு தொடரில் பவர்பிளே ஓவர்களில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார், மொத்தம் 13 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியிருக்கிறார். பவர்பிளேயில் அவர் எடுத்த 6 பேரும் அந்தந்த அணிகளின் ப்ரீமியம் பேட்டர்கள் எனலாம். டெம்பா பவுமா, இமாம் உல் ஹக், பாபர் அசாம், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோரை மதுஷங்கா ஆட்டமிழக்கச் செய்துள்ளார். நெதர்லாந்து, இங்கிலாந்து போட்டிகளில் அவர் பவர்பிளேவில் எடுக்கவில்லை. அப்படியிருக்க இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்களுக்கும் இவர் நெருக்கடி தர அதிக வாய்ப்புள்ளது.

என்ன செய்யும் இந்திய அணி?

இந்திய அணியின் வலது கை பேட்டர்களுக்கு, இடதுகை வேகப்பந்துவீச்சாளர் எப்போதும் அச்சுறுத்தல் தருபவராகவே இருந்துள்ளார். எனினும், ஷாகின் ஷா அப்ரிடி உள்ளிட்டோரை எதிர்கொண்டது போல் மதுஷங்காவை எதிர்கொண்டால் இந்திய அணி பேட்டர்கள் தொடக்க கட்டத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் ரன்களை குவிக்கலாம் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர். சுப்மான் கில் (Shubman Gill), ரோஹித் சர்மா (Rohit Sharma), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர்தான் மதுஷங்காவை அதிகம் எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்பதால் அவர்களின் வியூகம் எப்படியிருக்கும் என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | சுப்மான் கில்லுக்கு மீண்டும் ஓய்வு? ஓப்பனிங்கில் அதிரடி வீரர்... அசூர பலம் பெறும் இந்தியா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News