கோவை வெடிவிபத்து : நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு... இதுவரை 5 பேர் கைது!

கோவையில் நேற்று முன்தினம் வெடிவிபத்து ஏற்பட்ட நிலையில், அதுகுறித்து சந்தேகம் எழுந்துள்ளதால் இதுவரை 5 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 25, 2022, 10:25 AM IST
  • தீபாவளிக்கு முந்தைய நாள் இந்த வெடிவிபத்து ஏற்பட்டது.
  • நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும் பொருள்கள் பறிமுதல்.
  • டிஜிபி சைலேந்திரபாபு கோவையில் முகாம்.
கோவை வெடிவிபத்து : நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு... இதுவரை 5 பேர் கைது! title=

Coimbatore கோவை மாநகர பகுதியில் உக்கடம், கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே நேற்று முன்தினம் (அக். 23) அதிகாலை மாருதி காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில், கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் (29) என்பவர் உயிரிழந்தார்.

மேலும் இவரது கார் மற்றும் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அதே போல உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் இருந்து மர்ம மூட்டைகளை சிலர் எடுத்தும் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியது. இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகரம் உக்கடம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அதன் அடிப்படையில் உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா(25 ), முகமது அசாருதீன்(23), ஜிஎம் நகரை சேர்ந்த முகமது ரியாஸ்(27), ஃபிரோஸ் இஸ்மாயில்(27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26) உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்களிடம் மர்ம மூட்டைகள், நாட்டு வெடிக்குண்டின் மூல பொருட்கள் உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

மேலும் படிக்க |  கோவை சிலிண்டர் வெடிப்பு... சிக்கியது சிசிடிவி காட்சிகள்

இதையடுத்து நேற்று சம்பவ இடத்தில் 11 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் விசாரணை மற்றும் தடையவியல் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், உயிரிழந்தவரின் உடலை கோவை அரசு மருத்துவமனையில்  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பிரேத பரிசோதனைத்துறை தலைவர்  மருத்துவர் ஜெபசிங் தலைமையில் மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது உதவி ஆணையர் தங்கப்பாண்டி தலைமையிலான போலீசார் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்தனர்.

பிரேத பரிசோதனையின் போது  13 உடல் பாகங்கள் எடுக்கப்பட்டு மேல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு, அவரது மனைவி நஸ்ரத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, ஜமேசாவின் உறவினர்கள் அவரது உடலை வடகோவையில் உள்ள கபர்ஸ்தானில் முறைப்படி அடக்கம் செய்யபட்டது.

இந்த சூழலில் இந்த வெடி விபத்தின் எதிரொலியாக கோவை மாநகரில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு  காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைகண்ணன் கோவையில் முகாமிட்டு விசாரணை மற்றும் பாதுகாப்பு பணிகளை  மேற்பார்வையிட்டு வருகின்றனர். 

மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் இரண்டு டிஐஜி மற்றும் எட்டு மாவட்ட காவல்கண்காணிப்பாளர், 10 மாவட்ட காவலர்களுடன் இணைந்து 240 மத்திய அதிவிரைவு படையினர் ( Rapid action force) என சுமார் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மத்திய அதிவிரைவு படையினர்  கோவை உக்கடம் மற்றும் கண்ணப்பன் நகர் பகுதிகளில் இரண்டு குழுக்களாக பிரிந்து வஜ்ரா வாகனங்களுடன் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, மக்கள் அதிகம் கூடுமிடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையங்களிலும் டவுன்ஹால், உக்கடம், கோட்டைமேடு மற்றும் கரும்புக்கடை போன்ற பகுதிகளில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க |  கோவை வெடிவிபத்து : தற்கொலை படையா... பயங்கரவாதிகளின் எதிர்கால திட்டமா? - சைலேந்திபாபு விளக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News