Health Insurance: மருத்துவ காப்பீடு எடுக்க போறீங்களா... ‘இந்த’ விஷயங்களில் கவனம் தேவை!

Health Insurance: இன்றைய காலகட்டத்தில், சாதாரண சிகிச்சைக்காக சென்றாலே, ஆயிரங்களை எடுத்து வைக்க வேண்டிய நிலை உள்ளதால், எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவ செலவுகளை சமாளிக்க உடல்நல காப்பீடு என்பது அவசியமாகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 14, 2024, 11:22 AM IST
  • உடல்நலக் காப்பீட்டைப் பொறுத்தவரை வயது என்பது முக்கியமான தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாகும்.
  • காத்திருப்பு கால விதியை நீங்கள் நன்றாக அறிந்திருக்க வேண்டும்.
  • குறைந்த பிரீமியத்துடன் அதிக கவரேஜ் கொண்ட உடல்நலக் காப்பீட்டை வாங்குவது லாபகரமாக இருக்கும்.
Health Insurance: மருத்துவ காப்பீடு எடுக்க போறீங்களா... ‘இந்த’ விஷயங்களில் கவனம் தேவை! title=

Health Insurance: இன்றைய காலகட்டத்தில், மருத்துவ காப்பீடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டது. சாதாரண சிகிச்சைக்காக சென்றாலே, ஆயிரங்களை எடுத்து வைக்க வேண்டிய நிலை உள்ளதால், எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவ செலவுகளை சமாளிக்க உடல்நல காப்பீடு என்பது அவசியமாகிறது. குடும்ப உறுப்பினர்களுக்கான சிறந்த காப்பீட்டு திட்டம் என்பது, நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் சிறந்த பரிசு என்றால் மிகையில்லை.

மருத்துவ செலவுகள், நடுத்தர வர்த்தகத்தினர் சமாளிக்க முடியாத அளவில் தான் உள்ளது. மருத்துவமனைக்குள் நுழைந்தாலே நமது சேமிப்புகள் அனைத்தும் காலியாகி விடும் என்ற நிலை தான் உள்ளது. அப்படிப்பட்ட நிலையில் நமது குடும்ப உறுப்பினர்களுக்கான பொருத்தமான ஒரு சிறந்த காப்பீடு எடுப்பதன் மூலம், நாம் மருத்துவ செலவுகளை பற்றி கவலைப்படாமல் நிம்மத்தியாக இருக்கலாம். 

1. வயது வரம்பு

உடல்நலக் காப்பீட்டைப் பொறுத்தவரை வயது என்பது பிரீமியத்தை தீர்மானிக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். மருத்துவ பாலிசியை எடுக்கும் போது, காப்பீடு செய்யப்பட வேண்டிய குடும்ப உறுப்பினர்களின் வயதை மனதில் கொள்ள வேண்டும். ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியைப் போலவே, பிரீமியம் கட்டணம் மூத்த குடும்ப உறுப்பினரின் வயதைப் பொறுத்தது. இதுவரை 65 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே மருத்துவக் காப்பீடு எடுக்க முடியும் என்ற விதியை இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் (IRDAI) தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மருத்துவக் காப்பீடு வழங்கும் நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்காக பிரத்யேக காப்பீடு திட்டங்களை செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2. பிரீமியம் மற்றும் கவரேஜ் ஆகியவற்றின் சரியான கலவை

குறைந்த பிரீமியத்துடன் நல்ல கவரேஜ் கொண்ட உடல்நலக் காப்பீட்டை வாங்குவது லாபகரமாக இருக்கும். நீங்கள் செலுத்தக்கூடிய பிரீமியத்தில் விரிவான கவரேஜ் கிடைத்தால், குறைந்த பிரீமியத்துடன் கூடிய பாலிசி சிறப்பான தேர்வாக இருக்கும். காப்பீட்டில் கிடைக்கும் பலன்களில் சமரசம் செய்யாமல், நீங்கள் வாங்கக்கூடிய பிரீமியத்தில் போதுமான கவரேஜை வழங்கும் பாலிசியை தான் நீங்கள் வாங்க வேண்டும்.

3. காத்திருப்பு காலம் தொடர்பான விதி

காத்திருப்பு கால விதியை நீங்கள் நன்றாக அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால், இந்தக் காலக்கட்டத்தில் ஏற்கனவே உள்ள நோய்கள் அல்லது குறிப்பிட்ட நோய் சிகிச்சை தொடர்பான எந்தவொரு கிளைமையும் காப்பீட்டாளர் ஏற்கமாட்டார். காப்பீட்டாளர் மற்றும் நீங்கள் தேர்ந்தெடுத்த திட்டத்தைப் பொறுத்து, இந்த வெயிட்டிங் கால அளவு 24 மாதங்கள் முதல் 48 மாதங்கள் வரை இருக்கலாம். மேலும், இந்த காலம் முடிந்தால் மட்டுமே நீங்கள் குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சை பலன்களைப் பெற முடியும். இந்தக் காத்திருப்பு காலம், பாலிசியை வாங்குவதற்கு முன், தைராய்டு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற ஏற்கனவே இருக்கும் நோய்களுக்குப் பொருந்தும். கூடுதலாக, கீல்வாதம், கண்புரை போன்ற நோய்களுக்கான சில குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு இந்த விதி பொருந்தும். எனவே, சுகாதார அவசரநிலையின் போது காப்பீட்டு நன்மைகளைப் பெறுவதற்கு குறைந்தபட்ச காத்திருப்பு காலத்துடன் வரும் காப்பீட்டு திட்டத்தை ஒப்பிட்டுத் தேர்வு செய்யலாம்.

மேலும் படிக்க | Health Insurance: உடல் நல காப்பீடு பெற இனி வயது வரம்பு இல்லை.... IRDAI அதிரடி முடிவு..!

4. பணமில்லா மருத்துவ சிகிச்சை

ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பொதுவாக நெட்வொர்க் மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கும். அங்கு காப்பீடு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மருத்துவ அவசரநிலையின் போது பணமில்லா சிகிச்சையைப் பெறலாம். சேர்க்கை மற்றும் கிளைமின் போது தேவைப்படும் ஆவணங்கள் தொடர்பான நடைமுறை எளிதாக்கப்பட்டிருக்கும். மேலும், காப்பீட்டாளர் காப்பீட்டுத் தொகையை நேரடியாக மருத்துவமனைக்குச் செலுத்துவதால், நமக்கு சிகிச்சைக்காக பணம் கட்ட வேண்டிய தேவை ஏற்படாது. எனவே எம்பேனல் செய்யப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியலை உங்கள் காப்பீட்டாளரிடம் சரிபார்த்து, உங்கள் அருகில் உள்ள அனைத்து நெட்வொர்க் மருத்துவமனைகளின் விபரங்களை தெரிந்து கொண்டால் அது உதவியாக இருக்கும்.

5. மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய பாதுகாப்பு

பெரும்பாலான சுகாதாரத் திட்டங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது ஏற்படும் மருத்துவச் செலவுகளையும் உள்ளடக்கும். ஆம்புலன்ஸ் கட்டணம், மருத்துவ பரிசோதனைகள், மருந்துகள், மருத்துவர் கட்டணம் போன்றவற்றில் ஏற்படும் செலவுகளைச் சேமிக்க, மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பும் பின்பும் ஏற்படும் செலவுகளை உள்ளடக்கும் காப்பீட்டு திட்டத்தை வாங்கவும்.

6. மகப்பேறு செலவுகளின் பாதுகாப்பு

நீங்கள் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்தால் அல்லது குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடுகிறீர்களானால், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் மகப்பேறு தொடர்பான கவரேஜ் இருக்கிறதா, என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பிரசவ செலவு மற்றும் மகப்பேறு பராமரிப்பு செலவுகள் அதிகரித்து வருவதால், மகப்பேறு செலவுகளையும் உள்ளடக்கும் சுகாதார திட்டத்தை வாங்குவது நல்லது. வழக்கமாக, இதற்கான காப்பீட்டு பலன்களைப் பெறுவதற்கு 2 முதல் 4 ஆண்டுகள் வரை காத்திருக்கும் காலம் இருக்கும். உதாரணமாக, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டால், 2 ஆண்டுகள் வெயிடிங் பீரியட் உள்ள ஒரு திட்டம் உங்களுக்கு பொறுத்தமானதாக இருக்கும். பிரசவச் செலவைத் தவிர புதிதாகப் பிறந்த குழந்தையின் மருத்துவச் செலவுகளையும் உள்ளடக்கும் காப்பீட்டு திட்டத்தைத் தேர்வு செய்யவும்.

7. நோ-கிளைம்-போனஸ்/நோ-கிளைம்-தள்ளுபடி

NCB என்பது நீங்கள் க்ளைம் எதையும் தாக்கல் செய்யாத அனைத்து வருடங்களுக்கும் காப்பீட்டு நிறுவனம் வழங்கும் தள்ளுபடியைக் குறிக்கிறது. அடிப்படையில் உங்கள் கவரேஜ் தொகையானது அனைத்து க்ளெய்ம்-இல்லாத வருடங்களுக்கும் அடுத்தடுத்த பாலிசி புதுப்பித்தல்களின் போது அதிகரிக்கப்படும். இருப்பினும், பெரும்பாலான உடல்நலக் காப்பீடுகள் NCB வரம்பைக் குறிப்பிடுகின்றன. காப்பீட்டுத் தொகையின் அதிகரிப்பு காப்பீட்டாளரால் குறிப்பிடப்பட்ட வரம்பைப் பொறுத்தது.

மேலும் படிக்க | அசத்தலான 5 முதலீடு திட்டங்கள்! வயதான காலத்தில் பண கஷ்டம் இருக்காது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News