முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துகள் முடக்கம்: வருமானவரித்துறை விளக்கம்

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 1, 2022, 05:14 PM IST
  • முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு
  • வரி ஏய்ப்பு புகாரில் வருமானவரித்துறை நடவடிக்கை
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துகள் முடக்கம்: வருமானவரித்துறை விளக்கம் title=

கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2011-12-ம் ஆண்டு முதல் 2018-19ம் ஆண்டு வரைக்குமான 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கியை வசூலிக்கும் வகையில், புதுக்கோட்டையில் உள்ள அவரது நிலங்களை முடக்கியும், மூன்று வங்கிக் கணக்குகளை முடக்கியும் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது.

இதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறையின் வரி வசூல் அதிகாரி குமார் தீபக் ராஜ் என்பவரின் பதில் மனுவை அத்துறையின் வழக்கறிஞர் ஏ.பி.சீனிவாஸ் தாக்கல் செய்தார். அந்த பதில் மனுவில், 2011-12-லிருந்து 2018-19ஆம் ஆண்டு வரையிலான காலத்துக்கு உரிய  வருமான வரியை செலுத்தும்படி உத்தரவு பிறப்பித்தபோதும், வரி செலுத்தாததால் சொத்துகளும், வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கூவம் ஆற்றில் ஆண் சடலம் - சென்னையில் பரபரப்பு

முடக்கப்பட்ட ஒரு வங்கிக் கணக்கில்  2022-23-ஆம் நிதியாண்டில் அரசு, 8 லட்சத்து 50 ஆயிரத்து 226 ரூபாயை செலுத்தி உள்ளதாகவும், அந்த கணக்கில் இருந்து சொந்த செலவுக்காக பணம் எடுத்துள்ள நிலையில், தொகுதி பணிகளுக்காக எந்த பணத்தை எடுக்கவில்லை என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையின்போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்களிலிருந்து விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்ததற்கு ஆதாரம் இருந்ததால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு நிலுவையில் இருந்ததால், வரி பாக்கியில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் செலுத்தவில்லை. இதனால் சொத்துக்களும், வங்கி கணக்கும் முடக்கப்பட்டன எனவும்  வருமானவரித்துறை விளக்கமளித்துள்ளது.

வரி வசூலிக்க எந்த தடையும் இல்லை எனவும், விஜயபாஸ்கருக்கு  விளக்கம் அளிக்க வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுதான் மதிப்பீட்டு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது என்றும், சொத்துகளை வேறு யாருக்கும் விற்பதை தடுப்பதற்காகவும், அரசின் வருவாய் நலனை பாதுகாக்கவும் சட்டத்திற்குட்பட்டு சொத்துகள் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பல்வேறு அமைப்புகளிடம் நிவாரணம் கோருவதன் மூலம் மேல்முறையீட்டு நடவடிக்கையை தாமதப்படுத்த மனுதாரர் முயற்சிப்பதாகவும், வரி வசூல் அதிகாரியின் உத்தரவில் தலையிட அவசியமில்லை என்பதால், விஜபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வருமான வரித்துறையின் பதில் மனுவுக்கு, விஜயபாஸ்கர் தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணையை டிசம்பர் 12ஆம் தேதிக்கு நீதிபதி அனிதா சுமந்த் தள்ளிவைத்தார்.

மேலும் படிக்க | சூறாவளிக்காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News