'பாஜகவின் தேச விரோத செயல்...' வெளிநாட்டு முதலீடுகள் மூலம் தேர்தல் நிதி - பகீர் தகவல்கள்!

Minister Mano Thangaraj Allegation : பாஜகவுக்கு பல கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ள ஏர்டெல் உள்பட பல்வேறு நிறுவனங்களில் பெருமளவு வெளிநாடு முதலீடுகள் இருக்கும் நிலையில், இது நாட்டின் இறையான்மைக்கு எதிரானது இல்லையா என அமைச்சர் மனோ தங்கராஜ் பகீரங்கமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 15, 2024, 04:26 PM IST
  • ஏர்டெல் நிறுவனம் ரூ.234 கோடி பாஜகவிற்கு வழங்கியுள்ளது.
  • மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களிடமும் பாஜக நன்கொடை வாங்கி உள்ளது - மனோ தங்கராஜ்
  • நாட்டின் இறையாண்மையை மோடி அரசு கேள்விக்குறியாக்கி உள்ளது - மனோ தங்கராஜ்
'பாஜகவின் தேச விரோத செயல்...' வெளிநாட்டு முதலீடுகள் மூலம் தேர்தல் நிதி - பகீர் தகவல்கள்! title=

Minister Mano Thangaraj Allegation On BJP: தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவரது X பக்கத்தில், "வெளிநாட்டு முதலீடு உடைய நிறுவனங்கள் பாஜகவிற்கு பெருமளவில் நிதி வழங்கியிருப்பது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாக இல்லையா?" என கேள்வி எழுப்பி உள்ளார். 

மேலும், அதே பதிவில்,"டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது, எதிர்க்கட்சிகள் மீது அரசு அமைப்புகள் மூலம் தாக்குதல், எதிர்க்கட்சிகளின் வங்கிக்கணக்கு முடக்கம் உள்ளிட்ட சம்பவங்களை ஐ.நா சபையும், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளும் கண்டித்த போது, இந்திய இறையாண்மை குறித்த விவகாரங்களில் தலையிட வெளிநாடுகளுக்கு உரிமையில்லை என பாஜக அரசு பதில் கூறியது. 

ஏர்டெல் நிறுவனத்தின் நன்கொடை

ஆனால் தேர்தல் பத்திரம் மூலம் வெளிநாட்டு முதலீடுகள் உடைய நிறுவனங்களிடம் இருந்து பல கோடி ரூபாய் தேர்தல் நிதி பாஜக திரட்டியிருப்பது இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல் இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க | 4 கோடி ரூபாய் பறிமுதல், FIRல் முக்கிய தகவல் - நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்!

தேர்தல் பத்திரம் மூலம் 16,518 கோடி ரூபாய் அரசியல் கட்சிகளிடம் சென்ற பிறகு, தேர்தல் பத்திரம் திட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அந்த திட்டத்தை ரத்து செய்திருக்கிறது. இதே போல 2013-2023 வரை Electoral Trusts மற்றும் இதர வழிகளில் 7,726 கோடி ரூபாய் அரசியல் கட்சிகளுக்கு சென்றுள்ளன. இதில் 65% தொகை பாஜகவிற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

வெளிநாட்டினர் இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ நன்கொடை வழங்க முடியாது. ஆனால், தேர்தல் பத்திரங்கள் மூலமாகவும், தேர்தல் அறக்கட்டளைகள் மூலமாகவும் கட்சி நிதி வழங்கியுள்ள பல கார்ப்பரேட் நிறுவனங்களுள் வெளிநாட்டு முதலீடு பெருமளவில் உள்ளது. குறிப்பாக தேர்தல் பத்திரம் வாயிலாக மட்டும் பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.234 கோடி பாஜகவிற்கு வழங்கியுள்ளது.

சீனா - ஏர்டெல் ஒப்பந்தம்...
 
இந்நிறுவனத்தில், அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தின் முதலீடு உட்பட 38.5 விழுக்காடு வெளிநாட்டினரின் முதலீடு உள்ளது. இந்நிறுவனத்தில் இயக்குனர்களாக இருக்கும் சுவா சோக் கூங், டெயோ யி ஆர்தர் லேங், டக்ளஸ் ஆண்டர்சன் பெய்லி ஆகியோர் வெளிநாட்டினர். 

இந்நிறுவனத்தில் எவ்வளவு தொகை பாகிஸ்தானும், சீனாவும் முதலீடு செய்துள்ளன என்பது இந்திய மக்களுக்கு தெரியாது. இந்நிறுவனத்தில் 100% வெளிநாட்டினர் முதலீடு செய்வதற்கான அனுமதி 2020ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி இந்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், 2015இல் மோடி சீனா சென்ற போது, பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு சீனாவிடம் இருந்து 2 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. 

மேலும் படிக்க | MK Stalin: “வரி அல்ல-வழிப்பறி” GST குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்!

இவற்றுக்கு இடையே சீனா லட்சக்கணக்கான ஏக்கர் இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளது, அதை மீட்க மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி, பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி உட்பட பலர் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

வேதாந்தா நிறுவனமும் பாஜகவும்...

வேதாந்தா நிறுவனம் 230.15 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் 46.4% பங்குகளை வைத்துள்ள Twin Star Holdings நிறுவனம் இங்கிலாந்து நாட்டை சார்ந்தது. வேதாந்தா நிறுவனத்தின் அனில் அகர்வால் 2017ஆம் ஆண்டிற்கு பிறகு பலமுறை மோடியையும் பல முக்கிய அமைச்சர்களையும் சந்தித்து சுற்றுச்சூழல் விதிகளை தளர்த்த அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். 2022ஆம் ஆண்டில் அவர் விரும்பியபடி இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது என OCCRP அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. 

அரசியலமைப்புக்கே எதிரானது...

இதே போன்று, கோடக் மகிந்திராவின் இன்ஃபினா பைனான்ஸ் நிறுவனம் பாஜகவிற்கு 60 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது. இந்நிறுவனத்தில் 42.27 விழுக்காடு வெளிநாட்டினரின் முதலீடு உள்ளது. இது போன்று வெளிநாட்டு முதலீட்டாளர்களின் துணையோடு இயங்கி வரும் பல நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் வாயிலாகவும், தேர்தல் அறக்கட்டளைகள் வாயிலாகவும் கோடிக்கணக்கில் பாஜகவிற்கு வாரியிறைத்துள்ளன. 

யாரை இந்தியாவில் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று முடிவு செய்யும் அளவிற்கு பணம் வழங்கி பாஜகவை இந்நிறுவனங்கள் ஆதரித்துள்ளன. இதை இந்திய இறையாண்மைக்கு எதிரான செயலாக ஏன் பார்க்கக் கூடாது? இவற்றுள் ஒவ்வொரு நிறுவனங்களிலும் பாகிஸ்தான், சீன முதலீட்டாளர்களின் பங்களிப்பு எவ்வளவு என்பது பொதுமக்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை. இது இந்திய அரசியலமைப்பு சட்டம் 19(1)(a)-ற்கு எதிரானது. 

இந்தியாவை கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைத்துள்ளார்

இவை எப்பேர்ப்பட்ட தேசவிரோத செயல்? இந்தியாவில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை இந்திய மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள இறையாண்மையை மோடி அரசு கேள்விக்குறியாக்கி உள்ளது. மூச்சுக்கு முன்னூறு முறை நாட்டுப்பற்று பேசும் மோடி, தனது பதவி நாற்காலியை காப்பாற்றுவதற்காக இந்தியாவை வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைத்துள்ளார். இதற்கு வழிவகுக்கும் விதமாக 2017ஆம் ஆண்டிற்கு பிறகு பல முக்கிய சட்டதிருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

தேர்தல் பத்திர விவகாரத்தில், அதிகாரம் பாஜக கையில் இருக்கிறது என்ற மமதையில் சட்டத்தை எப்படியெல்லாம் சாதகமாக வளைக்கமுடியுமோ அப்படியெல்லாம் வளைத்து இந்திய இறையாண்மைக்கு சவால் விட்டிருக்கிறது. நட்டத்தில் இருந்த நிறுவனங்கள் பாஜகவிற்கு பணம் வழங்கியுள்ளன; ஆனால் அவை வருமான வரி செலுத்தவில்லை.

கோரத்தாண்டவம் ஆடியுள்ளது பாஜக

இது மட்டுமல்லாமல், குஜராத் தலித் விவசாயிடம் மோசடி முறையில் நன்கொடை, தன்னாட்சி அமைப்புகளை நிறுவனங்கள் மீது ஏவி விட்டு நன்கொடை, மருந்து தரச்சான்றில் தோல்வியடைந்த நிறுவனங்கள் நன்கொடை, அரசு-ஒப்பந்தங்கள் பெறும் முன் நன்கொடை, அரசின் மானியம் பெறும் நிறுவனங்களிடம் நன்கொடை, தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவுறாத நிறுவனங்கள் நன்கொடை என கோரத்தாண்டவம் ஆடியுள்ளது பாஜக. 

24 மணி நேரமும் பேசும் பசு பாதுகாப்பு கலாச்சாரம், மத நம்பிக்கை ஆகியவற்றுக்கு முரணாக மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களிடம் கூட கோடிக்கணக்கில் நன்கொடை பெற்றுள்ளது. மொத்தத்தில் இந்தியாவின் நலனுக்கு எதிராகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் மோடி அரசு துளியும் பயமின்றி செயல்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் எத்தனை நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன? அதன் முழு பட்டியல் காண்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News