உலகக் கோப்பை தோல்விக்கு பின் பிரதமர் பேசியது என்ன? - முதல்முறையாக ஷமி சொன்ன சம்பவம்!

Mohammed Shami: ஓடிஐ உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டி தோல்விக்கு பின் பிரதமர் மோடி ஓய்வறையில் தங்களிடம் பேசியது குறித்து முதல்முறையாக முகமது ஷமி மனம் திறந்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 7, 2024, 09:16 PM IST
  • முகமது ஷமி அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பௌலர் ஆவார்.
  • முகமது ஷமி 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
  • இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியடைந்தது.
உலகக் கோப்பை தோல்விக்கு பின் பிரதமர் பேசியது என்ன? - முதல்முறையாக ஷமி சொன்ன சம்பவம்! title=

Mohammed Shami PM Modi: இந்திய மூத்த ஆடவர் கிரிக்கெட் அணி வீரர்களும், அதன் ரசிகர்களும் கடந்தாண்டு இறுதியில் ஒரு பெரிய அதிர்ச்சிக்கு ஆளாகி, அதில் இருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றனர் எனலாம். உங்களுக்கே தெரிந்திருக்கும் என்ன சொல்ல வருகிறேன் என்று. அந்த சம்பவத்திற்கு பிறகு பலரும் இந்திய அணி விளையாடும் கிரிக்கெட் போட்டியை பார்க்க மனமே இருந்திருக்காது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. 

கடந்த அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) நடைபெற்றது. இந்த தொடரில் அனைத்து லீக் போட்டிகள் மற்றும் அரையிறுதி போட்டி என தொடர்ந்து 10 வெற்றிகளை குவித்து இறுதிப்போட்டியில் கெத்தாக நுழைந்த இந்திய அணியை இறுதிப்போட்டியில் வைத்து செய்து ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை 5ஆவது முறையாக வென்றது. 

தோல்வியில் இருந்து மீண்டது எப்படி?

ஐசிசி கோப்பை என்பது இந்திய அணிக்கு கடந்த 10 வருடங்களாக கிடைக்காமல் போய்க்கொண்ட இருக்கிறது. உலகத்தர வீரர்கள் இருந்தும் இந்திய அணியால் எந்த ஐசிசி கோப்பையை மட்டும் முத்தமிடவே முடியவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி கோடிக்கணக்கான ரசிகர்கள் முதல் இந்திய அணி வீரர்கள் வரை கடுமையாக பாதித்தது.

மேலும் படிக்க | உலக கிரிக்கெட்டில் கெத்து காட்டும் பும்ரா... எந்த பௌலரும் செய்யாத சாதனை!

கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma), நட்சத்திர வீரர் விராட் கோலி (Virat Kohli) உள்ளிட்டோர் அந்த தோல்விக்கு பின் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விளையாடவே சற்று யோசித்தனர். இருப்பினும், தென்னாப்பிரிக்கா மண்ணில் கிடைத்த வெற்றியினால் பெற்ற நம்பிக்கையின் மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் இருவரும் ரீ-என்ட்ரி கொடுத்தது ரசிகர்களுக்கு பெரும் உத்வேகம் அளித்தது.

ஷமி சொன்ன சம்பவம்...

2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின் தோல்விக்கு பிறகு, இருவரும் ஆப்கானிஸ்தான் தொடரில்தான் சர்வதேச டி20 அரங்கில் விளையாடினர். ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றோரே அந்த தோல்வியில் இருந்து வெளிவர சற்று கஷ்டப்பட்ட நிலையில், மற்றவர்கள் எப்படி தோல்வி மனநிலையில் இருந்து வெளியேறி தற்போது விளையாடி வருகிறார்கள் என்று கேட்டால் ஒவ்வொருவருக்கும் ஒரு வழி இருந்திருக்கும், ஒரு கதை இருக்கும். 

அந்த வகையில், இந்திய அணியின் மூத்த வேகப்பந்துவீச்சாளர் ஷமி தான் மட்டுமின்றி ஒட்டுமொத்த அணியும் எப்படி முதல்முறையாக தோல்வி மனநிலையில் இருந்து சற்று தேறினோம் என்ற கதையை பகிர்ந்துள்ளார். உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி, ஊடகம் ஒன்றில் இதுகுறித்து பேசி உள்ளார். 

அதில்,"தோல்விக்கு பின் எங்களின் இதயங்களே நொறுங்கிவிட்டன. அனைவரும் அழுதுகொண்டிருந்தோம். ஒருகட்டத்தில் எங்கள் யாருக்கும் சாப்பிடவே தோன்றவில்லை, அப்போது பிரதமர் மோடி அங்கு வந்தார். அவர் எங்களுக்கு பெரும் நம்பிக்கை அளித்தார். அவர்,'அனைவரும் நன்றாகவே விளையாடுனீர்கள், நாங்கள் உங்களுடன் உள்ளோம், நாடே உங்களுடன் உள்ளது' என ஊக்கமளித்தார். இதுபோன்றவற்றை நீங்கள் கேட்கும்போது, உங்கள் மனதும் அமைதியாகும்" என்றார்.

மேலும் படிக்க | IND vs ENG: 2வது டெஸ்ட்டில் தோல்வி! இந்தியாவை விட்டு வெளியேறிய இங்கிலாந்து!

பிரதமர் மோடியின் வருகை

மேலும், உலகக் கோப்பை இறுதிப்போட்டி தோல்விக்கு பின் இந்திய அணியின் ஓய்வறைக்கு பிரதமர் மோடி வந்தது குறித்து கடந்த டிசம்பர் மாதம் ஷமி பேசியிருந்தார். அப்போது பேசிய அவர்,"தோல்வியால் அனைவரும் துவண்டுபோய், ஒவ்வொருவரும் தனித்தனியே உட்கார்ந்திருந்தோம். அது எப்படி இருந்தது என்றால், எங்களின் இரண்டு மாத கடின உழைப்பு எல்லாம் ஒரே ஒரு போட்டியில் தவிடுபொடியானது போன்று இருந்தது. 

அது ஒரு மோசமான நாள், நாங்கள் துவண்டு போயிருந்தோம். அப்போது பிரதமர் அங்கு வருகிறார், நாங்கள் அவரின் முகத்தை பார்த்தே ஆக வேண்டும். பிரதமர் மோடி வருகிறார் என்று யாருமே எங்களுக்கு சொல்லவில்லை, திடீரென அவர் அங்கு வந்தார். முன்னர், எங்களுக்கு சாப்பிட வேண்டுமென்றோ அல்லது ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள வேண்டுமென்றோ தோன்றவில்லை. அப்போது அவர் வந்தது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. 

அவர் வந்தது நாங்கள் திகைத்துவிட்டோம். அப்போது அவர் வந்து எங்கள் அனைவரிடமும் பேசினார். அப்போதுதான், நாங்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் பேசவே ஆரம்பித்தோம். நாங்கள் பேசி அந்த தோல்வியை கடந்துபோக முடிவெடுத்தோம். எனவே, பிரதமரின் வருகை எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது" என பேசியிருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

மேலும் படிக்க | அடுத்த 5 மாதங்களுக்கு நோ ரெஸ்ட்! இந்திய அணி விளையாடும் தொடர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News