தல தோனியின் வெறியாட்டம்... அதிர்ந்தது வான்கடே - 207 ரன்கள் இலக்கை எட்டுமா மும்பை?

MI vs CSK: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 20 ஓவர்களில் 206 ரன்களை குவித்து அசத்தியுள்ளது.  

Written by - Sudharsan G | Last Updated : Apr 14, 2024, 10:57 PM IST
  • தோனி 4 பந்துகளில் 20 ரன்களை எடுத்தார்.
  • கடைசி ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார்.
  • தூபே மற்றும் ருதுராஜ் அரைசதம் அடித்தனர்.
தல தோனியின் வெறியாட்டம்... அதிர்ந்தது வான்கடே - 207 ரன்கள் இலக்கை எட்டுமா மும்பை? title=

IPL 2024 MI vs CSK: நடப்பு ஐபிஎல் தொடரில் அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருந்த மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கு முன் வரை, இரு அணிகளும் தலா 5 போட்டிகளை விளையாடியிருந்தன. அதில் சென்னை 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடனும், மும்பை 2 போட்டிகளில் வெற்றி பெற்றுடன் 4 புள்ளிகளுடனும் உள்ளன. 

இன்றைய போட்டியின் டாஸை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். வழக்கம்போல், இரவில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் மும்பை அணி இரண்டாவது பேட்டிங்கை தேர்ந்தெடுத்து. அந்த அணியின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், சிஎஸ்கே அணியில் மகேஷ் தீக்ஷனா வெளியே அமரவைக்கப்பட்டு மதீஷா பதிரானா களமிறங்கியுள்ளார்.

ரவீந்திரா - ரஹானே ஓப்பனிங்

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு ரச்சின் ரவீந்திரா - ரஹானே ஆகியோர் ஓப்பனிங்கில் களமிறங்கினர். ரஹானே 5 ரன்களில் ஆட்டமிழக்க ருதுராஜ் 3வது வீரராக களமிறங்கினார். ரவீந்திரா சற்று நிதானத்துடன் விளையாட ருதுராஜ் அதிரடி காட்டினார். இதனால் பவர்பிளே முடிவில் சிஎஸ்கே 1 விக்கெட்டுகள் இழப்பிற்கு 48 ரன்களை எடுத்தது. ரவீந்திரா 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 4வது வீரராக தூபே களம் கண்டார்.   

ருதுராஜ் - தூபே மிரட்டல்

இந்த ஜோடிதான் சிஎஸ்கே அணியை சிறப்பான ஸ்கோருக்கு அழைத்துச்சென்றது. பும்ராவை தவிர்த்து மற்ற பந்துவீச்சாளர்களை இந்த ஜோடி பதம் பார்த்தது. ஹர்திக் பாண்டியா வீசிய 10வது ஓழரில் 15 ரன்கள் கிடைத்த நிலையில், ரோமாரியோ ஷெப்பர்டின் 11வது ஓவரில் 12 ரன்கள், ஆகாஷ் மத்வாலின் 12வது ஓவரில் 10 ரன்கள் எடுக்கப்பட்டது. குறிப்பாக, ஷெப்பேர்ட் வீசிய 14வது ஓவரில் 22 ரன்களை குவிக்க ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அடுத்து ஆகாஷ் மத்வால் வீசிய 15வது ஓவரில் 17 ரன்கள் குவிக்கப்பட்டது. 

இதனால் 15 ஓவர்களில் சிஎஸ்கே 149 ரன்களை எட்டியது. ருதுராஜ் அரைசதம் கடந்திருந்தார். ஆனால், 16வது ஓவரை கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பாக வீசி 2 ரன்களை மட்டும் கொடுத்து ருதுராஜின் விக்கெட்டையும் கைப்பற்றினார். அடுத்த டேரில் களமிறங்க பும்ராவின் 17வது ஓவரில் 10 ரன்கள் எடுக்கப்பட்டது. கோட்ஸியின் 18வது ஓவரில் 12 ரன்களும், பும்ராவின் 19வது 7 ரன்களும் என தூபே - மிட்செல் ஜோடி ரன்களை குவித்தாலும் ஸ்கோர் 19 ஓவர்களில் 180 ரன்களில்தான் இருந்தது. 

கடைசி ஓவரை ஹர்திக் வீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்து வைடானது. மீண்டும் முதல் பந்தை வீசியதில் மிட்செல் பவுண்டரி அடித்தார். அதன்பின் இரண்டாம் பந்தும் வைடாக, மீண்டும் வீசப்பட்ட 2வது பந்தில் மிட்செல் ஆட்டமிழந்தார். 

தோனியின் ஹாட்ரிக் சிக்ஸர்

அப்போது தோனி களம்கண்டார். 3வது பந்தை லாங்க் ஆஃப் திசையிலும், 4வது பந்தை லாங் ஆன் திசையிலும், புள் டாஸாக வந்த 5வது பந்தை டீப் பேக் ஸ்கொயர் திசையிலும் என ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து தோனி மிரட்டினார். கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட சிஎஸ்கே 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை எடுத்தது. 

தூபே 38 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 66 ரன்களுடனும், தோனி 4 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கோட்ஸி 1 விக்கெட்டையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News