ஆதார் எதற்கெல்லாம் கட்டாயம்; எதற்கெல்லாம் கட்டாயம் இல்லை -முழு விவரம்

சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சேர்க்கைக்கும், நீட் தேர்வு எழுதவும் ஆதார் எண் கேட்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 26, 2018, 01:02 PM IST
ஆதார் எதற்கெல்லாம் கட்டாயம்; எதற்கெல்லாம் கட்டாயம் இல்லை -முழு விவரம் title=

சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சேர்க்கைக்கும், நீட் தேர்வு எழுதவும் ஆதார் எண் கேட்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..! 

இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அது வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் அடையாள எண் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஆதார் அடையாள அட்டை தொடர்பான மக்களின் தகவல்கள் திருடப்படுவதாக பல சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளது. 

ஆதார் தொடர்பான வழக்கு தீபக் மிஸ்ரா தலைமையிலான 5  நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் நிறுவனங்கள் ஆதார் கட்டாயம் என நிர்பந்திக்கக் கூடாது என்றும் ஆதார் கொண்டு வந்ததற்கான நோக்கம் சரியானது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஆதாருக்காக அடிப்படை தகவல்கள் மட்டுமே சேகரிப்பது போதுமானதாக இல்லை என்றும் ஆதாருக்காக சேகரிக்கப்பட்ட தகவல்களை பாதுகாக்க வலிமையான சட்டம் தேவை எனவும் உச்சநீதிமன்றம் கூறியது. 

அடையாளம் இல்லாதவர்களின் அடையாளமாக 'ஆதார்' விளங்குவதாகவும் 99% மக்கள் ஆதார் பெற்றுவிட்டதால் அதனை தடை செய்வது சரியல்ல எனவும் தெரிவித்த உச்சநீதிமன்றம், சி.பி.எஸ்.இ. மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என உத்தரவிட்டது. 

உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய விபரங்கள்: 

> சமுதாயத்தின் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு ஆதார் ஒரு அடையாளத்தை அளிக்கிறது. 

> ஆதாரை போலியாக தயாரிக்க முடியாது. எனவே, இது மற்ற அடையாள அட்டைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. ஒருவருக்கு  கொடுக்கப்படும் ஆதார் அடையாள அட்டையை வேறு ஒருவருக்கு கொடுக்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

> ஆதார் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது. ஆனால் அதன் பாதுகாப்பை உறுதி செய்ய அதில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

ஆதார் விபரங்களை தனியார் நிறுவனங்கள் கேட்க முடியாது. தேச பாதுகாப்புக்கு மட்டுமே ஆதாரை பயன்படுத்த வேண்டும். 

> அரசு நலத்திட்டங்களில் ஆதாரை அவசியமாக்குவதன் மூலம் போலிகளை களைய உதவும்.

> கடந்த சில ஆண்டுகளில் அதிகமாக பேசப்படும் ஒன்றாக ஆதார் மாறி இருக்கிறது.

> ஆதார் சிறந்தது  என்பதை விட தனித்துவமாக இருக்க வேண்டும். 

> தனிநபர் விபரங்கள் வெளியே கசிய கூடாது; தனிநபர் கண்ணியம் காக்கப்பட வேண்டும். 

> ஆதார் தகவல்களை பாதுகாப்பது என்பது அரசின் கடமை. 

> அதே நேரத்தில் ஆதார் இல்லை என்பதற்க்காக அவரது உரிமைகள் மறுக்கப்பட கூடாது.

> கல்வியில் ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது. நீட், சிபிஎஸ்இ உள்ளிட்ட தேர்வுகளுக்கும், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது.

> செல்போன் இணைப்பு, வங்கிக்கணக்கு ஆகியவற்றுக்கு ஆதார் கட்டாயமில்லை. ஆதார் இல்லையென்றாலும் அவர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்க வங்கிகள் அனுமதிக்க வேண்டும். 

> ஆனால் வருமான வரி கணக்கு, பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளது. 

 

Trending News