'கை' நழுவிப்போகும் அமேதி: சுதாரிக்குமா காங்கிரஸ்? களமிறங்குவாரா ராகுல் காந்தி?

Lok Sabha Elections: அமேதியில் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஏப்ரல் 26ஆம் தேதி அறிவிக்கக்கூடும் என கூறப்படுகின்றது. இது மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 13, 2024, 06:12 PM IST
  • தேர்தலில் தோல்வியடைந்த பிறகு அமேதி மீதான ஈர்ப்பை கைவிட்ட ராகுல்.
  • வார்த்தையும் செயலும் சுழலை மாற்றும்.
  • அமேதி என்ற கோட்டையில் கேள்விக்குறியாகும் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம்.
'கை' நழுவிப்போகும் அமேதி: சுதாரிக்குமா காங்கிரஸ்? களமிறங்குவாரா ராகுல் காந்தி? title=

Lok Sabha Elections: நாட்டில் தேர்தல் திருவிழா நடந்து வருகிறது. அரசியல் தலைவர்கள் முழு முனைப்புடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத சில தொகுதிகளும் உள்ளன. அவற்றில் விஐபி தொகுதிகளாக கருதப்படும் உத்தர பிரதேசத்தின் அமேதியும் ஒன்று. இன்னும் காங்கிரஸ் கட்சி அமேதியில் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. அமேதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் யார் போட்டியிடுவார்கள் என அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். பாஜக அமேதியில் மத்திய அமைச்சரும் தற்போதைய அமேதி எம்பி -யுமான ஸ்மிருதி இரானியை களமிறக்கியுள்ளது. ராய் பரேலியில் பாஜக வேட்பாளர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. 

அமேதியில் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஏப்ரல் 26ஆம் தேதி அறிவிக்கக்கூடும் என கூறப்படுகின்றது. இது மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அமேதியில் காந்தி குடும்பத்திலிருந்துதான் யாராவது போட்டியிடுவார்களா? அல்லது, புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமா? பொதுமக்கள் மனதில் இப்படி பல கேள்விகள் உள்ளன.

கட்சியின் அனைத்து நடவடிக்கைகளுக்கு பின்னாலும் ஒரு அரசியல் வியூகம் இருக்கும் என்றும், அரசியலே அதன் அடிப்படையில்தான் நடக்கிறது என்றும் உ.பி. காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே சமீபத்தில் கூறினார். ஏப்ரல் 26 என்ற தேதியும் ஒரு உத்தியின் பகுதிதான். ராய் பரேலி பல தசாப்தங்களாக காங்கிரஸ் மற்றும் காந்தி-நேரு குடும்பத்தின் கோட்டையாக இருந்தது. அமேதியும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்தது. ஆனால், அமேதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இப்போது அமைதி நிலவுகிறது. 'ராகுல் இல்லாமல் எதுவும் இல்லை' என்ற பேனர் இப்போதுதான் வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அலுவலகத்தைப் பார்த்தால் இன்னும் ஒரு மாதம் கழித்து தேர்தல் நடக்கப்போகிறது என்பதற்கான அறிகுறியே தெரியவில்லை.

தேர்தலில் தோல்வியடைந்த பிறகு அமேதி மீதான ஈர்ப்பை கைவிட்ட ராகுல்

2019 ஆம் மக்களவைத் தேர்தலில் அமேதியில் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்த பிறகு, அமேதி மீதான ஈர்ப்பு ராகுலுக்கு போய் விட்டது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ராகுல் காந்தி நியாய யாத்திரையின் ஒரு பகுதியாக அமேதிக்கு சென்றார். ஆனால் அந்த வருகையும் சூழலை மாற்றவில்லை, எந்த விதத்திலும் சிறப்பிக்கவில்லை. பதினைந்து ஆண்டுகள் அங்கு எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி, தங்கள் நெஞ்சை நெகிழவைக்கும் வகையில் ஏதாவது கூறுவார் என அமேதி மக்கள் காத்திருந்தனர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, அமேதியையே அவர் கைவிட்டார் என்றே கூறாலாம். கடந்த ஐந்து வருடங்களில் மூன்று முறைதான் அவர் அங்கு சென்றுள்ளார். ராகுல் காந்தி அமேதியை உள்ளூர் தலைவர்களின் கையில் விட்டுவிட்டார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | மோடியின் உத்தரவாதம் vs ராகுலின் உத்தரவாதம்... மக்கள் அதிகம் நம்புவது எதை? - முடிவுகள் இதோ!

வார்த்தையும் செயலும் சுழலை மாற்றும்

மறுபுறம், மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் சாணக்கியருமான அமித் ஷா சமயம் பார்த்து தங்கள் கட்சியை அமேதியில் பலப்படுத்தி வருகிறார். அவர் தனது கட்சிக்காரர்களுக்கு ஒரு பணியை வழங்கியுள்ளார். எதிர்க்கட்சியினரை பாஜகவில் சேர்ப்பதுதன் அந்த பணி. அமேதியில் தினமும் சில காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். அமேதியில் காங்கிரஸின் கதை முடிவுக்கு வந்துவிட்டது என்றே அனைவரும் கருதுகின்றனர். இந்த அரசியல் கதையின் மறுமுனையில் ராகுல் காந்தி இருக்கிறார். 

அரசியலை பொறுத்தவரை சரியான நேரத்தில் சொல்லப்படும் சரியான வார்த்தைகளும், செய்யப்படும் சரியான செயல்களும் மொத்த சூழலையும் நிலையையும் மாற்றும். அதுதான் அமேதியில் நடந்து வருகின்றது. காங்கிரஸ் அங்கு இன்னும் தனது வேட்பாளரை கூட அறிவிக்காத நிலையில், பாஜகவின் வேட்பாளரான ஸ்மிருதி இரானி, முழு முனைப்புடன் செயலில் இறங்கியுள்ளார். 2014 தேர்தலில் தோல்வியடைந்த பிறகும், அவர் எப்போதும் அமேதியை தனது வீடாகவும், இங்குள்ள வாக்காளர்களை தனது குடும்பமாகவும் கருதி வந்துள்ளார். இதை தனது செயலிலும் காட்டியுள்ளார். இந்த உணர்வுப்பூர்வமான விஷயத்தில் அவர் ராகுல் காந்தியை பின்னுக்கு தள்ளிவிட்டார் என்றே கூறலாம்.

அமேதி என்ற கோட்டையில் கேள்விக்குறியாகும் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம்

அமேதி மக்களவைத் தொகுதியில், ஐந்து சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் சமாஜ்வாதி கட்சி இரண்டு இடங்களையும் பாஜக மீதமுள்ள 3 இடங்களையும் கைப்பற்றின. சமீபத்தில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சியின் இரு எம்.எல்.ஏ.க்களும் பாஜகவுக்கு உதவினர். சமாஜ்வாதி கட்சி கடந்த பல ஆண்டுகளாக மக்களவைத் தேர்தல்களில் காங்கிரசுக்கு ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது. ராகுலும், பிரியங்காவும் இப்போது இங்கிருந்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், அது தவறான செய்தியாக வெளிச்செல்லும் என்று அகிலேஷ் யாதவ் காங்கிரஸிடம் கூறியுள்ளார். உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் மிக மோசமான நிலையை சந்தித்து வருகிறது. கட்சி எடுக்கும் ஒரே ஒரு தவறான முடிவு கூட அங்கு அக்கட்சியை மூழ்கடித்துவிடக்கூடும். 

மேலும் படிக்க | காங்கிரஸின் சிந்தனை வளர்ச்சிக்கு எதிரானது.. 70 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை -பிரதமர் மோடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News