வன்னியர் உள்ஒதுக்கீட்டை ரத்து செய்தது செல்லும்...உச்சநீதிமன்றம் தீர்ப்பு

கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு அளித்து தமிழக அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Written by - Chithira Rekha | Last Updated : Mar 31, 2022, 01:18 PM IST
  • வன்னியர் உள்ஒதுக்கீட்டை ரத்து செய்தது செல்லும்
  • உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
  • உள் ஒதுக்கீடு வழங்க காரணம் வேண்டும்
 வன்னியர் உள்ஒதுக்கீட்டை ரத்து செய்தது செல்லும்...உச்சநீதிமன்றம் தீர்ப்பு title=

தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு முறையில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் , சீர் மரபினருக்கு 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அவசரச் சட்டம், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. பின்னர் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த திமுக அரசு, வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பான அரசாணையை வெளியிட்டது. ஆனால் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல் அவசர கதியில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டுமென  உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள ஒரு வகுப்புக்கு மட்டும் உள் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது எனவும், எனவே தமிழக அரசு நிறைவேற்றிய வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் அவசரச்சட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு, பாமக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

மேலும் படிக்க | வன்னியர் 10.5% உள்இடஒதுக்கீடு- தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

இந்த வழக்கை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. கடந்த 23-ம் தேதி இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு அளித்து தமிழக அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் எனத் தீர்ப்பளித்து, மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் மீதமுள்ள 115 சமூகங்களில் வன்னியர்களை மட்டும் தனிப்பிரிவாகக் கருத அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்வதாகத் தெரிவித்தனர். மாநில அரசுக்கு உள் ஒதுக்கீடு வழங்க அதிகாரம் இருந்தாலும், அதற்கு நியாயமான காரணங்கள் வேண்டும் எனக் குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், சாதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீட்டை முடிவு செய்ய முடியாது எனவும் கருத்து தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | PMK: வன்னியர் இட ஒதுக்கீடுச் சட்டம் நிரந்தரமானது: அதை நீக்க முடியாது!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News