அண்ணா! எங்கள் அண்ணா!! யார் அண்ணா?!

1969 பிப்ரவரி 3-ஆம் தேதி அவர் இறந்தபோது சென்னையே மக்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்தது. 1.5 கோடி மக்கள் சென்னைக்கு அஞ்சலி செலுத்த வந்ததாக தகவல் இருக்கிறது. அவர் அண்ணா.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 15, 2021, 10:40 AM IST
அண்ணா! எங்கள் அண்ணா!!  யார் அண்ணா?! title=

1969 பிப்ரவரி 3-ஆம் தேதி அவர் இறந்தபோது சென்னையே மக்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்தது. 1.5 கோடி மக்கள் சென்னைக்கு அஞ்சலி செலுத்த வந்ததாக தகவல் இருக்கிறது. அவர் அண்ணா.

anna

1968 முதல் 2021 வரை 53 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருவது இரண்டே இரண்டு கட்சிகள். அந்த இரண்டிற்கும் ஆரம்பப்புள்ளி அண்ணா.  மெட்ராஸ் மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர்சூட்டி, இந்தப் பெயர் இருக்கும் வரை தமிழ்நாட்டை நான்தான் ஆள்வதாக பொருள் என சட்டப்பேரவையில் முழங்கியவர். அவர் அண்ணா.  திராவிட இயக்கத்தின் மூலம் பெரியார் சிந்தித்ததை, செய்ய நினைத்ததை அரசியல் கட்சியின் மூலம் செய்து காட்டியவர் அண்ணா.

காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராக பணிபுரிந்து, சென்னை பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி பின்னாளில் தமிழ்நாட்டின் முதல்வராக வளர்ந்தவர் அண்ணா.  மேடைத் தமிழுக்கென்று புதிய அகராதி அமைத்தவர் அண்ணா. அதன்பின் அவரது பாணியையே கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட பல தலைவர்கள் மேடைகளில் பின்பற்ற தொடங்கினார்கள்.  1937ஆம் ஆண்டு, தன்னுடைய 28ஆவது வயதிலேயே இந்தி திணிப்பை எதிர்த்து சிறை சென்றவர் அண்ணா.

anna

திராவிட நாடு தனி நாடு என்ற கொள்கையில் தீவிரமாக இருந்த அண்ணா, அதன்பொருட்டே தன்னுடைய பத்திரிகைக்கு ‘திராவிட நாடு’ என பெயரிட்டார். தமிழ் சொட்டும் இலக்கியமாக இன்றளவும் பார்க்கப்படுவது கம்ப ராமாயணம். ஆனால் அதனை தீயிட்டு கொளுத்த வேண்டும் என்று பேசியவர் அண்ணா. கம்ப ராமாயணம் ஆரியர்களின் மேன்மையை பேசுகிறது என்று வாதிட்டார். பின்னர் ’கம்பரசம்’ என்னும் புத்தகத்தில் தமிழர்கள் ஏன் கம்ப ராமாயணத்தை துறக்க வேண்டும் என்று எழுதினார் அண்ணா.  அதேநேரம் மொழிநடைக்கும், அழகிய சொற்களுக்கும் கம்பராமாயணத்தை படிக்க வேண்டும், “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு” என்று பேசியவர் அண்ணா.

திராவிடக் கட்சியினர் கறுப்புச்சட்டை அணிய வேண்டும் என்று பெரியார் சொன்னபோதும், மணியம்மையை திருமணம் முடிக்க பெரியார் முடிவு செய்தபோதும் கடுமையாக எதிர்த்தவர் அண்ணா. ஆசானாகவே இருந்தாலும் எதிர்க்கத் தயங்காதவர் அண்ணா.  அண்ணா துவங்கிய திராவிட முன்னேற்றக் கழகம், பெரியாரின் பல கொள்கைகளில் இருந்து வேறுபட்டிருந்தது. முக்கியமாக ”ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற கருத்தை அண்ணா முன்னெடுத்தார். ”நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன், அதற்குத் தேங்காயையும் உடைக்க மாட்டேன்” என்றார் அண்ணா.

தெய்வீக தலைப்புகளை தாங்கி காவியத் திரைப்படங்கள் மட்டுமே வந்துகொண்டிருந்த காலத்தில் சாமானியர்களின் கதைகளையும் படமாக்கியவர்கள் திராவிட எழுத்தாளர்களான அண்ணாவும், கருணாநிதியும். அதற்கு ‘வேலைக்காரி’ என்று தலைப்பிட்டு புரட்சி செய்தவர் அண்ணா.  இந்திரா காந்தியின் நெருக்கடி காரணமாக திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டார் அண்ணா. ஆனால் மாநில சுயாட்சி கொள்கையை கையிலெடுத்தார். மாநிலங்களுக்கு அதிக உரிமை வேண்டும் என்று பேசி “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்ற முழக்கத்தை முன்னெடுத்தார்.

anna

1967ஆம் ஆண்டு அண்ணா முதல்வரானபோது அவரும் அவரது அமைச்சர்களும் “இறைவன் பெயரால்” பதவியேற்காமல் “உளமாற” உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதற்கு வித்திட்டவர் அண்ணா.  தமிழ்நாட்டு அரசின் கொள்கை இருமொழிக் கொள்கைதான் என்று சட்டம் கொண்டுவந்தவர் அண்ணா.  உற்சவம் என்ற வார்த்தை திருவிழா என்று மாறியது, பஞ்சாயது சமிதி ஊராட்சி ஒன்றியம் ஆனது, ருசி சுவை ஆனது, வடமொழி கலப்பில் இருந்த தமிழ், சீர்த்திருத்தங்களின் மூலம் மீட்டெடுக்கப்பட்டது. இதற்கெல்லாம் விதை அண்ணா போட்டது.  சுயமரியாதை திருமணச் சட்டம் கொண்டுவந்தார், நில உச்சவரம்பை 15 ஏக்கராக குறைத்தார், பேருந்துகளை நாட்டுடைமையாக்கினார் இப்படி நவீன தமிழ்நாட்டின் முன்னோடியாக இருந்தவர் அண்ணா!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News