PBKS vs RR: ஹல்லா போல்... கொஞ்சம்... இன்றைய போட்டியில் மாஸ் காட்டப்போகும் பவுலர்கள் யார் யார்?

IPL 2023 PBKS vs RR: பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசக்கூடிய மூன்று பௌலர்கள் யார் என்பது குறித்து இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : May 19, 2023, 04:51 PM IST
  • இரு அணிகளும் இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளை பெற்றுள்ளது.
  • இதில், ராஜஸ்தான் அணி நெட் ரன்ரேட்டில் அதிகம் வைத்துள்ளது.
  • இன்றைய போட்டியில் வெற்றி பெறுபவர்கள் பிளேஆப் வாய்ப்பை தக்கவைப்பார்கள்.
PBKS vs RR: ஹல்லா போல்... கொஞ்சம்... இன்றைய போட்டியில் மாஸ் காட்டப்போகும் பவுலர்கள் யார் யார்? title=

IPL 2023 PBKS vs RR: நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. நாளை மறுதினம் லீக் போட்டிகள் நிறைவடைய உள்ளன. அந்த வகையில், இன்றைய பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. 66ஆவது லீக் போட்டியான இது ஹிமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள ஹெச்பிசிஏ மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. 

இரு அணிகளும் 13 போட்டிகளில் விளையாடி தலா 12 புள்ளிகளுடன் உள்ளன. தங்களின் கடைசி லீக் போட்டியான இதில் வெற்றி பெற்று, தங்களின் பிளேஆப் வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள இரு அணிகளும் கடுமையான போராாட்டத்தை இன்று வெளிகாட்ட வாய்ப்புள்ளது. 

பஞ்சாப் போராடுமா?

பஞ்சாப் அணியை பொறுத்தவரை டெல்லி உடனான கடந்த போட்டியில் மோசமாக பந்துவீசியிருந்தாலும், பேட்டிங்கில் கடைசி வரை போராடியது. பிரப்சிம்ரன் சிங், தவாண், லிவிங்ஸ்டன், அதர்வா டைடே, ஜித்தேஷ் சர்மா உள்ளிட்டோரின் அதிரடி இன்றைய போட்டியிலும் கைக்கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 
பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் விதத்தில் சரியான திட்டத்தை வகுக்க வேண்டும் என கேப்டன் ஷிகர் தவாண் மீது பலரும் விமர்சனம் வைத்து வந்தனர். அவரும், கடந்த போட்டியில் ஹர்பிரீத் ப்ரரை கடைசி கட்ட ஓவர்களுக்கு பயன்படுத்தியது தவறாக முடிந்தது என கூறியிருந்தார். இந்த நிலையில், அவர்களின் பந்துவீச்சும் முக்கியத்துவம் பெறுகிறது. 

மேலும் படிக்க | விராட் கோலியின் அற்புதமான ஆட்டத்தை இறுதிப் போட்டியில் பார்க்க வாய்ப்புள்ளதா?

கொஞ்சம் நல்லா Bowl

ராஜஸ்தான் அணியின் பேட்டிங் தான், அவர்களுக்கு மிகப்பெரிய பலம் எனலாம். ஜெய்ஸ்வால், பட்லர், சாம்சன், படிக்கல், ஹெட்மயர், ஜூரேல், ரூட், அஸ்வின் என 8ஆவது வீரர் வரை வலிமையான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது. இருப்பினும், அந்த அணி ஜெய்ப்பூரில் நடந்த பெங்களூரு அணியுடனான கடந்த போட்டியில், 59 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி படுதோல்வியை சந்தித்தது. 

இந்த தோல்வி அந்த அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியிருப்பதால், அதில் இருந்து மீண்டு வர ராஜஸ்தான் துடியாய் துடிக்கும். ராஜஸ்தான் அணிக்கு நெட் ரன்ரேட் அதிகமாக இருப்பது கூடுதல் நன்மை எனலாம். பேட்டிங்கில் மீட்சியடைந்தாலும், ராஜஸ்தான் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது. அஸ்வின், சஹால், ஸாம்பா என ஸ்பின் தாக்குதல், சந்தீப் சர்மா, போல்ட் என வேகத்திற்கு நல்ல பந்துவீச்சாளர்கள் அவர்களிடம் இருக்கிறார்.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் பேட்டிங்கில் பெரிதாக பிரச்சனை இல்லை என்றாலும் பந்துவீச்சு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளை சேர்ந்த 3 பந்துவீச்சாளர்கள் தான் இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டு, அதிக விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களின் கணிப்பை தெரிவித்துள்ளனர். அவர்கள் குறித்து இதில் காண்போம். 

சஹால்

இந்த தொடர், யுஸ்வேந்திர சாஹலுக்கு மீண்டும் ஒரு அற்புதமான ஐபிஎல் தொடராக அமைந்தது. லெக் ஸ்பின்னரான இவர் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணி வீரர்களை மண்ணைக் கவ்வவைத்துள்ளார்.

13 இன்னிங்ஸ்களில் 21 விக்கெட்டுகளுடன், சாஹல் தற்போது தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.  அவரது விதிவிலக்கான திறமைகள் மற்றும் அனுபவம் அவரை ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு பிரிவுக்கு விலைமதிப்பற்ற சொத்தாக ஆக்குகிறது. 

நாதன் எல்லிஸ்

நாதன் எல்லிஸ், சிறப்பான பந்துவீச்சால் ரபாடாவுக்கு இந்த தொடரின் ஆரம்ப கட்ட போட்டிகளில் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை. ராபாடா, எல்லீஸ் ஆகிய இருவரும் கடந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய போதிலும், ரபாடா பெரிதாக சோபிக்கவில்லை.

எல்லிஸ், கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டார் எனலாம். அவரது வேகம் மற்றும் வேரியஷன்கள் அவரை  எந்த ஓவரிலும் பந்துவீசக்கூடிய பந்துவீச்சாளர் என்ற தகுதியை அளிக்கிறது. இதுவரை, எல்லீஸ் ஒன்பது ஆட்டங்களில் ஒன்பதுக்கும் குறைவான எகானிமியுடன் 12 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும், எல்லிஸ் இந்த சீசனின் தொடக்கத்தில் ராஜஸ்தான் உடனான போட்டியில் 30 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதுதான் ஐபிஎல் தொடரின் அவரின் சிறப்பான பந்துவீச்சாகும். அதனை இன்று மீண்டும் செய்துகாட்டுவார் என எதிர்பார்ப்பு. 

போல்ட்

தர்மசாலாவில் சூழலுக்கு ஏற்ப சிறப்பாக செயல்படக்கூடியவர் என எதிர்பார்க்கப்படும் பந்து வீச்சாளர் ராஜஸ்தானின் டிரென்ட் போல்ட் ஆவார். கடைசி ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா விளையாடியதால், இவருக்கு இடமில்லை. ஆனால் இன்றைய போட்டியில் நிச்சயம் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள சிறந்த புதிய பந்து வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான போல்ட், தொடக்க ஓவர்களில் எதிரணி பேட்டர்களுக்கு சிம்மசொப்பனாக திகழக்கூடியவர். நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை ஒன்பது இன்னிங்ஸ்களில், போல்ட் 17.00 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டில் 12 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இதுவரை விளையாடிய 13 ஆட்டங்களில் 12ல், பஞ்சாப் அணி தனது முதல் ஆறு ஓவர்களுக்குள் குறைந்தபட்சம் ஒரு விக்கெட்டையாவது இழந்துள்ளது. இதனால், இன்றிரவும், பஞ்சாப் பேட்டர்களுக்கு போல்ட்டின் அச்சுறுத்தல் இருக்கும் என கணிக்கப்படுகிறது.  

மேலும் படிக்க | 1490 நாளுக்கு பின் சதம்... உடனே விராட் போட்ட வீடியோ கால் - அந்த பக்கம் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News