பேட்டிங்கிலும் பட்டையை கிளப்பிய இந்தியா... 4 பேர் அரைசதம் - அடங்கியது ஆஸ்திரேலியா!

IND vs AUS: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 22, 2023, 10:24 PM IST
  • கில், ருதுராஜ், சூர்யகுமார், ராகுல் ஆகிய நால்வர் அரைசதம்.
  • ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
  • நாளை மறுநாள் (செப். 22) இரண்டாவது ஒருநாள் நடைபெறுகிறது.
பேட்டிங்கிலும் பட்டையை கிளப்பிய இந்தியா... 4 பேர் அரைசதம் - அடங்கியது ஆஸ்திரேலியா! title=

IND vs AUS: ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பை தொடருக்கு முன்னரே இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு முன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரு அணிகளும் விளையாடுகிறது. தொடரின் முதல் போட்டி பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலியில் உள்ள ஐ.எஸ். பிந்த்ரா கிரிக்கெட் மைதானத்தில் விளையாடியது.

இந்தியாவின் பந்துவீச்சு

இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஷமியின் தாக்குதல் பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 276 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக வார்னர் 52 ரன்களையும், இங்லிஸ் 45 ரன்களையும் எடுத்தனர். ஸ்மித், லபுஷேன், ஸ்டாய்னிஸ், கம்மின்ஸ் ஆகியோரும் நல்ல பங்களிப்பை அளித்தாலும், ஆடுகளத்திற்கும், சூழலுக்கும் ஏற்ற ரன்களை அவர்கள் எடுக்க தவறியதாகவே வல்லுநர்கள் கூறினர். 

இந்திய பந்துவீச்சு தரப்பில் ஷமி, பும்ரா, ஷர்துல், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 10 ஓவர்களை வீசினர். இதில் ஷமி 5 விக்கெட்டுகளையும், பும்ரா, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினார். ஷர்துல் தாக்கூர் விக்கெட் ஏதும் எடுக்காத நிலையில், 78 ரன்களை கொடுத்திருந்தார். 277 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய ஓப்பனர்களாக கில், ருதுராஜ் ஆகியோர் களமிறங்கினர். 

மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவை அலறவிட்ட ஷமியின் சொத்து மதிப்பு தெரியுமா?

கில் - ருதுராஜ் அசத்தல் அடிதளம்

இவர்கள் இருவரும் தொடக்கம் முதலே நிதானமாக விளையாடி பவுண்டரிகளையும் அடித்து ஸ்கோரை சீராக உயர்த்தினர். கில் அரைசதம் அடித்த சில ஓவர்களுக்கு பின், ருதுராஜ் கெய்க்வாட்டும் தனது முதல் ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார். இந்த ஜோடி 21.3 ஓவர்களில் 142 ரன்களை குவித்திருந்தது. அதற்கு அடுத்த பந்தில், ஸாம்பாவிடம் ருதுராஜ் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 77 பந்துகளில் 10 பவுண்டரிகள் உள்பட 71 ரன்களை எடுத்திருந்தார். அடுத்து வந்த ஷ்ரேயஸ் 3 ரன்களில் துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். 

தொடர்ந்து, 63 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உடன் 74 ரன்களை அடித்து கில் ஸாம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, களம்கண்ட இஷான் கிஷன் கேப்டன் கேஎல் ராகுலுடன் நிதானமாக விளையாடினார். இருப்பினும், இஷான் 18 ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் களம் புகுந்தார். அவரும் ராகுலுடன் நிதானமாக விளையாடினாலும், ஒரு கட்டத்தில் துரிதமாக ரன்களை குவிக்க தொடங்கினார்.

சூர்யகுமாரின் கட்டுப்பாடு 

ராகுலுக்கு முன்னரே அவர் தனது அரைசதத்தை பதிவு செய்து, வெற்றி இலக்கை நோக்கி பாய்ந்து வந்தார். ஆனால், இந்திய அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட போது, சிக்ஸர் அடிக்க முயன்று, ஷேன் அபாட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 49 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

முடித்து வைத்த ராகுல்

இறுதிகட்டத்தில், கேஎல் ராகுல் பவுண்டரிகளை அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். அதன்படி, இந்திய அணி 48.4 ஓவர்களில் இலக்கை அடைந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அடுத்த இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் (செப். 24) இந்தூரில் நடைபெறுகிறது. அந்த போட்டியிலும் கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படுவார். 

மேலும் படிக்க | தோனி தியாகமெல்லாம் செய்யவில்லை... கம்பீர் கருத்துக்கு ஸ்ரீசாந்த் நறுக் பதில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News