FIFA World Cup Final 2022: முதல் உலகக்கோப்பையை முத்தமிட்டார் மெஸ்ஸி... அர்ஜென்டினா சாம்பியன்

Argentina won the FIFA World Cup 2022 : பிபா உலகக்கோப்பை தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில், பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் அர்ஜென்டினா 4-2 (3-3) என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி, மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 19, 2022, 12:38 AM IST
  • 1978, 1986 உலகக்கோப்பைக்கு பிறகு தற்போது அர்ஜென்டினா கோப்பை வென்றுள்ளது.
  • மெஸ்ஸி உலகக்கோப்பையுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து விடை பெற உள்ளார்.
  • இம்பாப்பே அடித்த ஹாட்ரிக் கோல்கள் வீணானது.
FIFA World Cup Final 2022: முதல் உலகக்கோப்பையை முத்தமிட்டார் மெஸ்ஸி... அர்ஜென்டினா சாம்பியன் title=

Argentina won the FIFA World Cup 2022 : உலகமே உற்றுபார்த்துக்கொண்டிருந்த பிபா உலகக்கோப்பை இறுதிப்போட்டி இன்று நடந்தது. நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி, அர்ஜென்டினாவுடன் மோதியது. இரு அணிகளும் தங்களின் மூன்றாவது உலகக்கோப்பை வெல்லும் முனைப்பில் களம் கண்டன. 

அர்ஜென்டினா அணியை விட பிரான்ஸ் அணி வலிமையாக பார்க்கப்பட்ட நிலையில், மாறாக இப்போட்டியின் தொடக்கத்தில் இருந்தே அர்ஜென்டினா அணிதான் ஆக்ரோஷமாக விளையாடியது. அப்போது 23ஆவது நிமிடத்தில், அர்ஜென்டினா வீரர் டி மரியாவை, பிரான்ஸ் வீரர் டேம்பேலே பாக்ஸின் உள்ளே தள்ளிவிட்டதால் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. 

முதல் பாதி மெஸ்ஸி மயம்

அந்த பெனால்டியை மெஸ்ஸி கோலாக மாற்றி அர்ஜென்டினாவை முன்னிலை பெற வைத்தார். இந்த தொடரில், மெஸ்ஸியின் ஆறாவது கோல் இதுவாகும். தொடர்ந்து, அதே ஆதிக்கத்தை தொடர்ந்து அர்ஜென்டினா 36ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தது.

மெஸ்ஸி ஆடுகளத்தின் நடுப்பகுதியில் இருந்து கொடுத்த பாஸை, மாக் அலிஸ்டர் அற்புதமாக அசிஸ்ட் செய்ய அதை டி மரியா கோலாக மாற்றி அசத்தினார். இதையடுத்து, 2-0 என்ற முன்னிலையுடன் அர்ஜென்டினா முதல் பாதியை நிறைவுசெய்தது. முதற்பாதி முழுவதும் அர்ஜென்டினா மட்டுமே ஆதிக்கம் செலுத்தியது. 

உதாரணமாக, முதற்பாதியில் 60 சதவீதம் பந்தை தன்வசம் வைத்திருந்த அர்ஜென்டினா கோலை நோக்கி 6 முறையும், கோல் முயற்சியாக 3 முறையும் தாக்குதல் தொடுத்திருந்தது. மாறாக, 40 சதவீதம் பந்தை கடத்திய பிரான்ஸ் அணியின் ஷாட்ஸ் மற்றும் ஷாட்ஸ் ஆன் டாக்கெட் பூஜ்ஜியமாகவே இருந்தது. 

இதயத்தை வென்ற இம்பாப்பே

இதையடுத்து, இரண்டாம் பாதியிலும் இதே ஆதிக்கத்தை அர்ஜென்டினா தொடர, பலம் வாய்ந்த பிரான்ஸ் தொடர்ந்து தடுமாறியது. இந்த நிலை 80ஆவது நிமிடம் வரை நீடித்தது. அப்போது, 80ஆவது நிமிடத்தில், அர்ஜென்டினாவின் ஓட்டாமெண்டி செய்த தவறால், பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதை கோலாக மாற்றினார் நட்சத்திர வீரர் இம்பாப்பே. 

துவண்டு போயிருந்த பிரான்ஸ் அணியினருக்கு பெரும் ஊக்கத்தை இது அளித்தது. தொடர்ந்து, பெனால்டி அடித்த அடுத்த நிமிடமே அதாவது 81ஆவது நிமிடத்தில் இம்பாப்பே அசத்தலாக அடுத்த கோலை அடித்து, போட்டியை சமன் செய்தார். வெற்றி கொண்டாட்டத்திற்காக காத்திருந்த அர்ஜென்டினா அணிக்கு இது பேரிடியாக விழுந்தது. 90 நிமிடங்கள் முடிந்த பின் தொடர்ந்து, 8 நிமிடம் இன்ஞ்சூரி டைம் கொடுக்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் போட்டி கூடுதல் நேரத்திற்கு சென்றது. 

இதையடுத்து, அரைமணி நேரம் கூடுதல் கொடுக்கப்பட்டது. அதன் முதல் 15 நிமிடத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பிற்பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க அடுத்தடுத்து முயன்ற நிலையில், 108ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி அசத்தலாக கோல் அடிக்க வெற்றிக்கனி அர்ஜென்டினா பக்கம் சென்றது. தொடர்ந்து, 117ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை இம்பாப்பே கோலாக மாற்றி ஆட்டத்தை 3-3 என்ற கணக்கில் சமன் செய்தார். ஆட்டம் பெனால்டி கிக்கை நோக்கி நகர்ந்தது.

பரபரப்பான பெனால்டி

பெனால்டி ஷூட்அவுட்டில், பிரான்ஸ் தனது முதல் வாய்ப்பை பெற்றது. அதன்படி, பிரான்ஸ் அணியில் இம்பாப்பேவும், அர்ஜென்டினாவில் பிரான்ஸ் அணியும் முதல் கோலை அடித்தனர். அடுத்து, பிரான்ஸ் தரப்பில் வந்த கான்மேன் அடித்த கிக்கை அர்ஜென்டினா கோல் கீப்பர் மார்டினஸ் லாவகமாக தடுத்தார். ஆனால், அர்ஜென்டினா இரண்டாவது வாய்ப்பில் கோல் அடித்து முன்னிலை பெற்றது. 

மூன்றாவது வாய்ப்பையும் பிரான்ஸ் தவறவிட அர்ஜென்டினா மூன்றாவதிலும் கோல் அடித்து தொடர்ந்து முன்னிலை பெற்றது. நான்காவது கோலை பிரான்ஸ் அடித்திருந்தாலும், அடுத்து அர்ஜென்டினாவும் நான்காவது வாய்ப்பில் கோல் அடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன்மூலம், பெனால்டியில் 4-2 (3-3) என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக அர்ஜென்டினா கோப்பை கைப்பற்றியது. மெஸ்ஸி தனது முதல் உலகக்கோப்பை கைகளில் தழுவினார். 1978, 1986 உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா கோப்பையை வென்றிருந்தது..

உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் வென்ற அர்ஜென்டினா அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது. 36 ஆண்டுகளுக்கு பின் அர்ஜென்டினா கோப்பை வென்றுள்ளது. மேலும் 2002ஆம் ஆண்டு பிரேசில் வென்ற பிறகு, 20 ஆண்டுகள் கழித்து தென் அமெரிக்க அணி உலகக்கோப்பை வென்றிருக்கிறது. 96 ஆண்டுகால உலகக்கோப்பை வரலாற்றில் அதிகம் கோல் அடிக்கப்பட்ட இறுதிப்போட்டி இதுதான். 1966ஆம் ஆண்டுக்கு பிறகு, இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை இம்பாப்பே பெற்றுள்ளார். 

விருதுகளை குவித்த அர்ஜென்டினா

தொடரில் அதிக கோல்கள் அடித்த இம்பாப்பே கோல்டன் பூட் விருதை வென்றார். மெஸ்ஸிக்கு கோல்டன் பால் விருது வழங்கப்பட்டது. அர்ஜென்டினா கோல் கீப்பர் மார்ட்டீனஸ் கோல்டன் கிளவ் விருதை பெற்றார். சிறந்த இளம் வீரர் விருதை என்ஸோ ஃபெர்னான்டஸ் வென்றார். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News