KKR vs MI: பிளே ஆப் சுற்றில் அதிரடியாக நுழைந்த கேகேஆர்... மும்பை படுதோல்வி!

KKR vs MI Match Highlights: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மேலும், 18 புள்ளிகளை பெற்று முதல் அணியாக கேகேஆர் அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.

Written by - Sudharsan G | Last Updated : May 12, 2024, 01:20 AM IST
  • வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் அருமையாக பந்துவீசினர்.
  • கொல்கத்தா அணிக்கு இன்னும் 2 போட்டிகள் உள்ளன.
  • மும்பை அணிக்கு இன்னும் ஒரே ஒரு லீக் போட்டியே உள்ளது.
KKR vs MI: பிளே ஆப் சுற்றில் அதிரடியாக நுழைந்த கேகேஆர்... மும்பை படுதோல்வி! title=

KKR vs MI Match Highlights: இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 60வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. போட்டி மழையால் சற்று தாமதாக தொடங்கியது. 7 மணிக்கு வீசப்பட வேண்டிய டாஸ் இரவு 9 மணிக்கு வீசப்பட்டது. இரவு 9.15 மணிக்குதான் போட்டி தொடங்கியது. போட்டி தொடங்க தாமதமானதால் ஆட்டம் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

இதில் முதல் 5 ஓவர்கள் மட்டுமே பவர்பிளே கொடுக்கப்பட்டது. அதேபோல், 1 பந்துவீச்சாளர் மட்டுமே 4 ஓவர்களை வீச வேண்டும். 4 பந்துவீச்சாளர்கள் அதிகபட்சமாக 3 ஓவர்களை வீசலாம் என கூறப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை அணி எந்த மாற்றமும் செய்யாத நிலையில், கொல்கத்தா அணியில் அங்கிரிஷ் ரகுவன்ஷிக்கு பதில் நிதிஷ் ராணா சேர்க்கப்பட்டார். 

158 ரன்கள் இலக்கு

கேகேஆர் ஓப்பனர்களான பில் சால்ட், சுனில் நரைன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் வெங்கடேஷ் ஐயர் நிலைத்து நின்று ஆடினார். மற்ற வீரர்களும் சற்று பங்களிப்பு அளிக்க நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை எடுத்தது. 

மேலும் படிக்க | CSK vs RR: அஸ்வினின் வியூகத்தை முறியடிக்குமா சிஎஸ்கே... சேப்பாக்கத்தின் கொம்பன் யாரு...?

பியூஷ் சாவ்லா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். நுவான் துஷாரா, கம்போஜ் ஆகிோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 42 ரன்களையும், நிதிஷ் ராணா 33 ரன்களையும் சேர்த்தனர். தொடர்ந்து 158 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நல்ல தொடக்கமே அமைந்தது. 

சொதப்பிய மிடில் ஆர்டர்

5 ஓவர்கள் பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி மும்பை அணி 59 ரன்களை குவித்தது. மீதம் உள்ள 11 ஓவர்களில் 99 ரன்களை அடிக்க வேண்டும் என நிலை இருந்தது. இஷான் கிஷன் மட்டுமே பவர்பிளேவில் அதிரடியாக விளையாடினார். ரோஹித் சர்மா மிகவும் நிதானமாகவே விளையாடினார். இஷான் கிஷன் 22 பந்துகளில் 40 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 

அடுத்து ரோஹித் 19, சூர்யகுமார் யாதவ் 11, ஹர்திக் பாண்டியா 2, டிம் டேவிட் 0, நேஹல் வதேரா 3 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் திலக் வர்மா போராடி வந்தார். கடைசி 15வது ஓவரில் களமிறங்கிய நமன் அதிரடியாக ரன்களை குவித்தார். கடைசி ஓவருக்கு 22 ரன்களே தேவைப்பட்டது. இருப்பினும், ஹர்ஷித் ராணா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ரின்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

வருண் ஆட்டநாயகன்

அவர் 6 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என 17 ரன்களை அடித்திருந்தார். 3வது பந்தில் திலக் வர்மா 32 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 16 ஓவர்களில் மும்பை அணியால் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்களையே அடிக்க முடிந்தது. அதன்மூலம், 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரின் 9வது வெற்றியை பதிவு செய்து 18 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தகுதிபெற்றது. 

அந்த அணி பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதில் வருண் 4 ஓவர்களை வீசி 17 ரன்களையே கொடுத்தார், அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 

இன்று 2 போட்டிகள்

ஐபிஎல் தொடரில் ஞாயிற்றுக்கிழமையான இன்று (மே 12) இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. மாலை 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றனர். இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. 

மேலும் படிக்க | சிஎஸ்கேவுக்கு லாஸ்ட் சான்ஸ்.‌‌.. இந்த மாற்றத்தை செய்யாவிட்டால் பிளே ஆப் கனவு அம்போ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News